பக்கம் எண் :

இன்பத்துப் பால்
கற்பியல்

அதிகாரம் 128. குறிப்பறிவுறுத்தல்

அஃதாவது, தலைமகன்,தலைமகள்,தோழியாகிய மூவரும் ஒருவர் குறிப்பை யொருவர்க்குச் சொல்லுதல். இது பிரிந்துபோன தலைமகன் திரும்பி வந்தவிடத்து நிகழ்வதாகலின்; அவர்வயின் விதும்பலின் பின் வைக்கப்பட்டது.

 

கரப்பினுங் கையிகந் தொல்லாநின் னுண்க
ணுரைக்க லுறுவதொன் றுண்டு.

 

(பிரிந்து கூடிய தலைமகன் வேட்கை மிகுதியினாற் புதுவது பன்னாளும் பாராட்டத் தலைமகள் இது வொன்றுடைத்தென அஞ்சிய வழி , அதை யவள் குறிப்பாலறிந்து அவன் அவட்குச் சொல்லியது.)

கரப்பினும்-நீ சொல்லாது மறைத்தாலும் , ஒல்லாகை இகந்து-அதற்குடம்படாது உன்கட்டை மீறி , நின் உண் கண் உரைக்கல் உறுவது ஒன்று உண்டு-உன் மையுண்ட கண்கள் எனக்குக் குறிப்பாகச் சொல்லுவதொரு செய்தியுள்ளது . இனி அதை நீயே வெளிப்படையாகச் சொல்வாயாக.

தலைமகனின் வரையிறந்த பாராட்டில் மீண்டும் பிரிதற் குறிப்புள்ளதாகத் தலைமகள் கருதி வேறுபட்டதை , அவட்கெடுத்துச்சொல்லித் தன் பிரியாமையை யுணர்த்தியவாறு . கரத்தல் நாணாலடக்குதல்.