பக்கம் எண் :

செறிதொடி செய்திறந்த கள்ள முறுதுயர்
தீர்க்கு மருந்தொன் றுடைத்து.

 

(இதுவுமது)

செறிதொடி செய்து இறந்த கள்ளம்-நெருங்கிய வளையல்களை யணிந்த என் காதலி , என்னிடத்தில்லாத தொன்றைக் கருதிக் கொண்டு அது கரணியமாக எனக்குமறைத்து வைத்த குறிப்பு ; உறு துயர் தீர்க்கும் மருந்து ஒன்று உடைத்து- என் பெருந்துயரைத் தீர்க்கும் மருந்தாவ தொன்றை உடையதாயிருக்கின்றது.

இல்லாததொன்று பிரிவு . ' கள்ளம் ' ஆகுபெயர் . மறைத்து வைத்தது உடன்போக் குட்கொண்டது . ' உறுதுயர் ' பெருமகிழ் வுறுத்தற்குச் செய்த பாராட்டு வினைகளை பிரிவுக்குறிப்பாகக் கொண்டு அஞ்சியதால் உண்டான மன வருத்தம் . 'உறு' உரிச்சொல் மருந்தாவது பிரிவின்மை தோழியால் தெரிவித்தல் . அதை உடனே செய்தல் வேண்டு மென்பதாம் . ' செறி தொடி ' அன்மொழித் தொகை .