பக்கம் எண் :

தொடிநோக்கி மென்றோளு நோக்கி யடிநோக்கி
யஃதாண் டவள்செய் தது.

 

(தலைமகள் குறிப்பறிந்த தோழி அதனைத் தலைமகற் கறிவித்து.)

( யானது தெளிவித்த வழித் தெளியாது) தொடி நோக்கி - அவர் பிரிந்து செல்ல நான் இங்கிருப்பின் இவை நில்லா வென்னுங் குறிப்பில்தன் தோட்கடகங்களை நோக்கி ; மெல் தோளும் நோக்கி - அதற் கேதுவாக இவை மெலியு மென்னுங் குறிப்பில் தன் மெல்லிய தோள்களையும் நோக்கி ; அடி நோக்கி - அதன் பின் , இவ்விரண்டும் நிகழாமல் நீங்கள் காதலருடன் நடந்து சென்று காத்தல் வேண்டு மென்னுங் குறிப்பில் தன் பாதங்களையும் நோக்கி ; அஃது ஆண்டு அவள் செய்தது-இங்ஙனம் உடன்போக்குக் குறித்த அச்செயலையே அன்று அவள் செய்தாள் .

பிரிவுக் குறிப் புண்டாயின் செலவழுங்குவித்தல் இதன் பயனாம் .