பக்கம் எண் :

பெண்ணினாற் பெண்மை யுடைத்தென்ப கண்ணினாற்
காமநோய் சொல்லி யிரவு.

 

(தலைமகன் பிரியாமைக் குறிப்பைத் தோழிக்கறிவுறுத்தது.)

காமநோய் கண்ணினால் சொல்லி இரவு-மகளிர் தம் காமநோயைத் தம் உயிர்த்தோழியர்க்கும் வாய் விட்டுச் சொல்லாது , கண்ணினாற் குறிப்பாக வுணர்த்தி அதைத் தீர்க்க வேண்டு மென்று இரப்பது ; பெண்ணினால் பெண்மை யுடைத்து என்ப-தமக்கு இயல்பாகவுள்ள பெண்டன்மை மேலும் ஒரு பெண்டன்மை யுடைமையாகும் என்பர் அறிந்தோர் .

'கண்ணினாற் காமநோய் சொல்லியிரவு ' என்பதே மூலமாதலால் ' இரவு' என்பதற்கு ' உடன் போதல் குறித்துத் தம் அடியினை யிரத்தல் ' என்று பரிமேலழகர் உரைத்திருப்பது மிகையே யாம் . தலைமகன் தன்பிரிவின்மைக் குறிப்பை அறிவுறுப்பான் , தலைமகளின் நாணச் சிறப்பை வியந்து அதைப் பொதுப்படுத்திக் கூறியவாறு .