பக்கம் எண் :

ஊடற்கட் சென்றேன்மற் றோழி யதுமறந்து
கூடற்கட் சென்றதென் னெஞ்சு

 

(இதுவுமது)

தோழி-தோழீ ; ஊடற்கண் சென்றேன்-காதலரைக் காணுமுன் அவர் செய்த தவற்றை நினைந்து அவரோடு ஊடுதலை மேற்கொண்டேன் ; என்நெஞ்சு அது மறந்து கூடற்கண் சென்றது-ஆனால் , அவரைக் கண்டவுடன் என் உள்ளமோ அதைமறந்து அவரோடு கூடுதலை மேற்கொண்டு விட்டது.

அவரைக் கண்டவுடனேயே என் நெஞ்சு அறைபோனமையின் என் தீர்மானம் நிறைவேறவில்லை யென்பதாம். ஊடற்கண் சென்றதனால் என்ன பயன் என்பதுபட நின்றமையின் ' மன் ' ஒழியிசை, ஊடற்கண் சென்றதும் நெஞ்சேயாதலின் ' அது மறந்து' என்றாள் .