பக்கம் எண் :

இளித்தக்க வின்னா செயினுங் களித்தார்க்குக்
கள்ளற்றே கள்ளநின் மார்பு.

 

(தலைமகள் புணர்ச்சி விதுப்பறிந்த தோழி தலைமகற்குச் சொல்லியது.)

கள்வ-மாயக்காரரே!;நின் மார்பு-எங்கட்கு உம்முடைய மார்பு; களித்தார்க்கு இளித்தக்க இன்னா செயினும் கள் அற்றே-தன்னையுண்டு மகிழ்ந்தவர்க்கு இழிவுதரத்தக்க தீயவற்றைச் செய்யினும் , அவரால் மேன்மேலும் விரும்பப்படுவதாகிய கள்ளுப் போன்றதே.

இன்னாதவை நாணின்மை,நிறையின்மை, உணர்வின்மை,ஒழுக்கமின்மை,துப்புரவின்மை முதலியன . எங்கட்கு நாணின்மை முதலியவற்றை நீர் செய்யினும் , எங்களால் மேன்மேலும் நீர் விரும்பப்படுவது வியப்பானதே யென்பதாம். அத்தகைய விருப்பமுண்டாமாறு மாயத்தொழில் வல்லீர் என்பாள் ' கள்வ' என்றாள் . ஏகாரம் தேற்றம்.