பக்கம் எண் :

மலரினு மெல்லிது காமஞ் சிலரதன்
செவ்வி தலைப்படு வார்.

 

(உணர்ப்புவயின் வாரா ஊடற்கண் தலைமகன் சொல்லியது.)

காமம் மலரினும் மெல்லிது-காமவின்பம் மலரினும் மெல்லியதாகும்; அதன் செவ்வி தலைப்படுவார் சிலர்-அதை யறிந்து அதன் மென்மை கெடாது நுண்ணிதாக நுகர்பவர் உலகத்துச் சிலரே.

காலமும் இடமும் அறிந்து , குறிப்பும் வேட்கையும் உடல்நிலையும் நோக்கி , கலவிவினைகட்கேற்ற துணைக்கருவிகளுடன் நூன்முறைப் படி நுகரவேண்டுதலின் சிலரதன் செவ்வி தலைப்படுவார் என்றும் , இவற்றுள் ஒன்று குறையினும் இன்பங் கெடுமாதலின் ' மலரினும் மெல்லிது காமம் ' என்றும் , கூறினான் . தொடின் வாடுவதும் மோப்பக் குழைவதுமான எல்லாம் உட்பட 'மலர்' என்றான் . உம்மை உயர்வு சிறப்பு . குறிப்பொவ்வாமையால் நான் காமச்செவ்வி பெற்றிலேன் என்பதாம் . தலைமகள் ஊடல் தீர்தல் இதன் பயன்.