பக்கம் எண் :

உறாஅ தவர்க்கண்ட கண்ணு மவரைச்
செறாஅரெனச் சேறியென் னெஞ்சு.

 

(இதுவுமது)

என் நெஞ்சு-என் உள்ளமே!; உறாதவர்க் கண்ட கண்ணும்-கணவர் இன்று நம்மாட்டு அன்பில்லாதவர் என்று அறிந்த பின்பும் ; செறார் என அவரைச் சேறி-நாம் அவரிடஞ் சென்றால் சினவாமற் சேர்த்துக்கொள்வாரென்று கருதி அவர்பாற் செல்லுகின்றாய் ; இதுபோலும் மடமை வேறுண்டோ!

பழங்காதல் நோக்கிச் செல்கின்றாய் . நீகருதியது நிறை வேறுமோ வென்பதாம் . ' அவரை' வேற்றுமை மயக்கம் ; இரண்டாவது ஏழாவதில் மயங்கிற்று.'உறாஅ' இசைநிறை யளபெடை. செறாஅர்' எதுகை பற்றி வந்த இன்னிசை யளபெடை.