பக்கம் எண் :

கெட்டார்க்கு நட்டாரில் லென்பதோ நெஞ்சேநீ
பெட்டாங் கவர்பின் செலல்.

 

(இதுவுமது)

நெஞ்சே-என் உள்ளமே!; நீ பெட்டாங்கு அவர் பின் செலல்-என்னிடத்து நில்லாது நீ விரும்பியவாறே அவரிடஞ் செல்லுதற்குக் கரணியம்; கெட்டார்க்கு நட்டார் இல் என்பதோ- நொடித்தவர்க்கு உறவில்லை என்னும் உலக நடப்போ , வேறோ? சொல்வாயாக.

என் கட்டிற் கடங்காது செல்கின்றா யென்பாள் ' பெட்டாங்கு ' என்றும் , தான் மான மிழந்தமையின் ' கெட்டார்க்கு' என்றும் , தன் வயமின்றிப் பிறர் வயப்படுதல் அடிமைத்தனம் என்பாள் ' பின் செலல் ' என்றும் , கூறினாள் . உடன் பிறந்து உடன் வாழும் உள்ளமும் உதவாதநிலையில் உள்ளேன் என்பதாம் . பெட்டஆங்கு பெட்டாங்கு.