பக்கம் எண் :

நாணு மறந்தே னவர்மறக் கல்லாவென்
மாணா மடநெஞ்சிற் பட்டு.

 

(இதுவுமது)

அவர் மறக்கல்லா என் மாணா மடநெஞ்சிற்பட்டு-தன்னை மறந்த காதலரைத் தான் மறக்கமாட்டாத என் மாட்சிமையில்லா மடநெஞ்சின் சேர்க்கையினால் ; நாணும்மறந்தேன்-என் உயிரினுஞ் சிறந்த நாணையும் மறந்துவிட்டேன்.

மாணாமை மானத்தைக் காத்துக்கொள்ளாமை . மடமை,கண்டபோது நினைத்துக் காணாதபோது மறக்கவேண்டிய தவற்றைக் காணாதபோது நினைத்துக் கண்டபோது மறத்தல். நாண் , பல்லாண்டு கூடியொழுகிய பின்பும் அன்று கண்டாற்போல் உள்ளமும் உடம்பும் ஒடுங்குதல்.

எஞ்ஞான்று மெங்கணவ ரெந்தோள்மேற் சேர்ந்தெழினும்
அஞ்ஞான்று கண்டேம்போல் நாணுதுமால்

(நாலடி.385)

கண்டபொழுதே புணர்ச்சி விதும்பலால் ' நாணும் மறந்தேன் ' என்றாள். உம்மை உயர்வு சிறப்பு.