பக்கம் எண் :

எள்ளி னிளிவாமென் றெண்ணி யவர்திற
முள்ளு முயிர்க்காத னெஞ்சு.

 

(இதுவுமது)

உயிர்க் காதல் நெஞ்சு-உயிர்மேற் காதலையுடைய என் உள்ளம் ; எள்ளின் இளிவு ஆம் என்று எண்ணி-நம்மைப் பொருட்படுத்தாது சென்றாரென்று நம் கணவரை நாமும் பொருட்படுத்தாதிருப் போமாயின் பின் நமக்கு இழிவாம் என்று கருதி ; அவர் திறம் உள்ளும்-அவர் பக்கமே நினைக்கும்.

எள்ளுதல் வாயில் மறுத்தல்,அஃதாவது தலைமகள் புலவியைத் தீர்க்குமாறு தலைமகன் விடுத்த தோழி , பாங்கன் , பாணன் , புலவன் முதலியோரை ஏற்றுக்கொள்ளாது புறக்கணித்தல் . இளிவு ,பணியாமையாலும் பிரிவாற்றாமையாலும் அழகும்நிறையும் நாணும் இழத்தலாலும் நேர்வது , திறம் , வாயில் நேர்தலும் புலவிதீர்தலும் கூடலும் முதலியன. இளிவிற் கஞ்சுதலாலும் இறந்து படமாட்டாமையாலும் கூடக் கருதுகின்ற தென்பதாம் . இறந்து படவிரும்பாமை ' உயிர்க்காதல் நெஞ்சு' என்றதால் அறியப்படும்.