பக்கம் எண் :

துன்பத்திற் கியாரே துணையாவார் தாமுடைய
நெஞ்சந் துணையல் வழி .

 

(உணர்ப்புவயின் வாரா ஊடற்கண் தலைமகன் சொல்லியது.)

துன்பத்திற்கு -ஒருவர்க்குத் துன்பம் வந்தவிடத்து அதை நீக்குதற்கு ; தாம் உடைய நெஞ்சம் துணையல்வழி- தம்முடன் பிறந்து தம் முறுப்பாக இரண்டறக் கலந்திருப்பதும் தமக்குதவ முழுக்கடைமைப்பட்டிருப்பதுமான உள்ளமே துணையாயிருந்து உதவாத விடத்து ; யாரே துணையாவார் - வேறுயார்தான் துணையாக வந்து உதவுவார்?

துன்பம் என்றது இங்கு உணர்ப்புவயின் வாரா ஊடலை . அஃதாவது தலைமகன் தெளிவிக்கவுந் தெளியாத தலைமகள் சடைவை . அதற்கு நெஞ்சந் துணையாகாமையாவது , அவளை யன்பிலளென்று விட்டு நீங்காது அவளோடு கூடற்கண் விதும்பல் . வாழ்க்கைத்துணையும் எனக்குத் துணையாகாது என் அந்தக்கரணமும் எனக்குத் துணையாகாது போனபின் , நான் இத்துன்பத்தை எங்ஙனந் தாங்குவேன் என்பதாம் . ஏகாரம் பிரிநிலை.