பக்கம் எண் :

இன்பத்துப் பால்
கற்பியல்

அதிகாரம் 131. புலவி

அஃதாவது, தலைமகள் புணர்ச்சி விரும்பாது புலக்கக் கருதியவிடத்துப் புலத்தல்.ஆதிகார முறைமையும் இதனால் விளங்கும்.

புலத்தல் தலைமகள் செயலேயாதலாலும், இவ்வதிகாரத் தலைப்புப் புலவி யென்றே யிருத்தலாலும், உணர்ப்புவயின் வாராவூடற்கண் தலைமகன் சொல்வதெல்லாம் கூடற்கியலாமை பற்றி நொந்து கொள்வதல்லாது கூடல் வேண்டாமென விலக்குதலன்மையாலும் "இருவர் நெஞ்சும் புணர்ச்சி விதும்பாது புலக்கக் கருதியவழி ஒருவரொடொருவர் புலத்தல்." எனப் பரிமேலழகர் கூறியிருப்பது பொருந்தா தென்க.

 

புல்லா திராஅப் புலத்தை யவருறு
மல்லனோய் காண்கஞ் சிறிது.

 

(வாயிலாகச் சென்ற தோழி தலைமகள் வாயில் நேர்தற்பொருட்டு அவளொடு நகையாடிச் சொல்லியது.)

புல்லாது இராப்புலத்தை - தலைவியே! நீ விரைந்து சென்று காதலரைத் தழுவாது இக்கரணியத்தை மேலிட்டுக் கொண்டு புலப்பாயாக;அவர் உறும் அல்லல் நோய் சிறிதுகாலம்- அங்ஙனம் புலந்தால் அவர் அடையும்துனபநோயைச் சற்றுக் கண்டு களிப்போம்.

உன் ஆற்றாமை கண்டும் பிரிந்துபோய் நமக்குப் பெருந்துன்பத்தை விளைத்ததினால், நாமும் அவர்க்குச் சிறிது துன்பம் விளைத்து அவர் படும்பாட்டைக் காண்போம் என நகையாடி வாயில் நேர்வித்தவாறு. 'அல்லல்நோய்' துன்பத்தைச் செய்யுங் காமநோய். புலவி நீளின் சுவையிழக்குமாதலால் 'சிறிது' என்றாள். 'புலத்தை' -'ஐ' ஏவலொருமை யீறு, 'புலத்தி' என்பதும் பாடம். 'இராஅ' அசைநிறையளபெடை.