பக்கம் எண் :

உப்பமைந் தற்றாற் புலவி யதுசிறிது
மிக்கற்றா னீள விடல்.

 

(புலவி தீர்ந்து வாயில் நேரும்வகை தோழி சொல்லியது.)

புலவி உப்பு அமைந்த அற்று -புலவி கலவி இன்பஞ் செய்தற்கு வேண்டிய அளவாயிருத்தல்; உப்புச் சமைத்தவுணவு இன்சுவையாதற்கு வேண்டும் அளவினதாயிருத்தல் போலும்;சிறிது நீள விடல் அது மிக்க அற்று - இனி, அப்புலவியை அவ்வளவினுஞ் சிறிது மிக விடுதல் அவ்வுப்பு அளவிற்கு மிஞ்சினாற் போலும்.

பழகப் பழகப் பாலும் புளிப்பதுபோல, நாள்தொறும் நுகர்ந்து வரும் கலவியின்பம் நாளடைவிற் சுவைகுன்றியபோது அதற்குச் சுவையூட்டுதலின், புலவியை உப்பு என்றாள். ஆயினும் உப்பு மிக்கவிடத்து உணவுச்சுவை கெட்டாற்போல், புலவி அளவிற்குமேல் நீண்டவிடத்துக் கலவியின்பங்கெடும் என்றவாறாம். புலவியை நீளவிடுதலாவது, கலவிமேலெழுந்த குறிப்பும் ஆசையும் அடங்குமளவு புலத்தல் , வாயில் நேர்விக்கின்றாளாதலின், சிறிதும் நீளவிடலாகாது என்றாள். 'ஆல்' ஈரிடத்தும் அசைநிலை.