பக்கம் எண் :

நீரும் நிழல தினிதே புலவியும்
வீழுநர் கண்ணே யினிது.

 

(இதுவுமது)

நீரும் நிழலதே இனிது - உயிர்வாழ்க்கைக் கின்றியமையாத நீரும் நிழலடியுள்ளதே குளிர்ந்து இன்பந்தரும்; வெயிலிற் காய்ந்தது இன்பந்தராது; புலவியும் வீழுநர் கண்ணே இனிது - அதுபோலக் கலவியின்பத்தை மிகுக்கும் புலவியும் அன்புடையாரிடத்தே இன்பத்திற் கேதுவாகும்; அன்பிலாரிடத்தோ துன்பத்திற்கே யேதுவாகும்.

இது வெப்பநாடாதலின் முது வேனிற்கால நண்பகற் காட்டு வழிப்போக்கன் நீர் வேட்கை, நிலைமை நோக்கி 'நிழலதே இனிது ' என்றான். தழைத்தடர்ந்த தண்கா நிழலில் தங்கிய நீர் பனிநீர் போற் குளிர்ச்சிமிக்குத் தாகமுங் களைப்புந் தணித்தலின் இனிதாயிற்று, "காவோ டறக்குளத் தொட்டானும்" (திரிகடுகம் 70) என்றதை இத்தொடர்பில் நோக்குக. 'வீழுநர்' காதலரின் ஆற்றாமைக்கு நோதலும் கலவியின்கண் வேட்கையுமுடையவர். இவளுக்கு அவ்விரண்டுமின்மையின் இப்புலவி இன்னாதாயிற்று என்பதாம். ஏகாரம் ஈரிடத்தும் பிரிநிலை. இவற்றுள் முன்னது பிரித்துக் கூட்டப்பட்டது.