பக்கம் எண் :

அறத்துப் பால்
இல்லறவியல்

அதிகாரம் 14. ஒழுக்கமுடைமை

அஃதாவது , அறத்திலும் , கடமையிலும் வழுவாதொழுகுதல் . முக்கரணமும் அடங்கிய வழி இஃது எளிதாகலின் , அடக்கமுடைமையின் பின் வைக்கப்பட்டது .

 

ஒழுக்கம் விழுப்பந் தரலா னொமுக்க
முயிரினு மோம்பப் படும் .

 

ஒழுக்கம் விழுப்பம் தரலான் - ஒழுக்கம் எல்லார்க்கும் சிறப்பைத் தருதலால் ; ஒழுக்கம் உயிரினும் ஓம்பப்படும் - அவ்வொழுக்கம் உயிரினும் சிறப்பாகப் பேணிக் காக்கப்படும் .

உயிர் எல்லாப் பொருளினுஞ் சிறந்ததாயினும் , அவ்வுயிருக்கே சிறப்பைத் தருதலால் ' உயிரினு மோம்பப்படும் ' என்றார்.