பக்கம் எண் :

ஊட லுணங்க விடுவாரோ டென்னெஞ்சங்
கூடுவே மென்ப தவா.

 

(புலவி நீங்கவேண்டுமென்ற தோழிக்குத் தலைமகள் புலவி தீர்வாளாய்ச் சொல்லியது.)

ஊடல் உணங்க விடுவாரோடு - ஊடல்கொண்ட போது உணர்த்தி மகிழ்விக்காமல் வாடவிடுகின்றவரோடு; என் நெஞ்சம் கூடுவேம் என்பது - என் உள்ளம் கூடியின்புறுவேம் என்று, கருதுகிறதற்குக் கரணியம்; அவா - அதன் ஆசையேயன்றி வேறன்று.

இதற்குப் பரிமேலழகருரை வருமாறு -

(உணர்ப்புவயின் வாராவூடற்கட்டலைமகன் தலைமகளோடு புலந்து சொல்லியது.)

ஊடல் உணங்க - தானூடற்கண்ணே மெலியா நிற்கவும்; விடுவாரோடு கூடுவேம் என்பது என்னெஞ்சம் அவா - விட்டிருக்க வல்லாரோடு கூடக்கடவேமென்று என்னெஞ்சம் முயறற்கேது தன்னவாவே பிறிதில்லை.

என்பதற்கேது என இருக்கவேண்டியது. 'என்பது' எனக் கருமகம் (காரியம்) கரணமாக (காரணமாக) ச்சார்த்திக் கூறப்பட்டது.