பக்கம் எண் :

இன்பத்துப் பால்
கற்பியல்

அதிகாரம் 132. புலவி நுணுக்கம்

அஃதாவது, நுண்புலவி. அது, தலைமகனும் தலைமகளும் ஓரமளிக்கண் கூடியிருந்தவிடத்து அவன்பாற் புலத்தற்குக் கரணகமான தவறில்லையாகவும் தன் காதல் மிகுதியால் ஒரு நுண்ணிய தவறிருப்பதாகவுட்கொண்டு அவனொடு அவள் புலத்தல். இது புலவியின்நுணுக்கமாதலின் புலவியின் பின்வைக்கப்பட்டது. தவறு என்னும் கரணகத்தின் நுணுக்கம் புலவி என்னும் கருமகத்தின்மேல் நின்றது.

 

பெண்ணியலா ரெல்லாருங் கண்ணிற் பொதுவுண்பர்
நண்ணேன் பரத்தநின் மார்பு.

 

(உலாப் போய் வந்த தலைமகன் பள்ளியிடத்தானாகத் தலைமகள் சொல்லியது.)

பரத்த - பரத்தமையுடையாய்; பெண்ணியலார் எல்லாரும் கண்ணிற் பொது வுண்பர் - பெண்தன்மையுடையவரெல்லாரும் தம் கண்ணாற்பொதுவாக நுகர்வர்; நின்மார்பு நண்ணேன் - ஆதலால், அவர் நுகர்ந்த எச்சிலாகிய உன் மார்பைப் பொருந்தேன்.

முடிசூட்டு நாளன்றும் வெற்றிவிழா நாளன்றும் அரசன் தேரேறித் தன் தலைநகரத் தேர் மறுகுகளில் உலாவரும்போது, பேதை முதலிய எழுவகைப்பருவமகளிரும் அவன்மீது காதல் கொள்வதாகப் பாடுவது உலா எனும் பனுவல்.

"ஊரொடு தோற்றமும் உரித்தென மொழிப, " (தொல். 1013) பரத்தையர் கற்பு நிறை நாண் முதலிய நற்குணங்களின்றிப் பெண்வடிவு மட்டுங் கொண்டவர் என்னுங் கருத்தாற் ' பெண்ணியலார் என்றாள். பொதுவுண்டல் ஒருங்கு நோக்குதல். இதனாற் பரத்தமை புலவிநுணுக்கத்தில் தலைமகன்மேல் ஏற்றிக் கூறப்படுவதல்லது, உண்மையாக நிகழ்வதன்றென்றும், திருவள்ளுர் கூறும் இன்பத்துப்பாலிற்குரியதன் றென்றும் அறிந்துகொள்க.