பக்கம் எண் :

கோட்டுப்பூச் சூடினுங் காயு மொருந்தியைக்
காட்டிய சூடினீ ரென்று.

 

(தலைமகள் புலவிக் குறிப்பைக் கண்டு நீவிர் கூடியொழுகிவரவும், இது நிகழ்தற்குக் கரணகம் யாதென்ற தோழிக்குத் தலைமகன் சொல்லியது.)

கோட்டுப்பூச் சூடினும் - இம்மருத நிலத்து நீர்ப் பூவும் கொடிப்பூவு மன்றி வேற்று நிலத்துக் கோட்டுபூவைச் சூடினேனாயினும்; ஒருத்தியைக் காட்டிய சூடினீர் என்று காயும் - நும்மாற் காதலிக்கப்பட்ட வேறொருத்திக்கு இப்பூவணியைக் காட்டல் வேண்டிச் சூடினீரென்று சீற்றங் கொள்வாள் என் காதலி இத்தகையாளுக்கு ஒரு கரணகமும் வேண்டுமோ?

கோட்டுப்பூ மரக்கிளைகளில் மலர்வது. கோடு - கிளை. வேற்று நிலம் முல்லை குறிஞ்சி நெய்தல். கோட்டுப் பூவைக் கோடுதலைச் செய்யும் மாலை என்றார் பரிமேலழகர். ஆசிரியர் மாலையென்னாது பூவென்றமையாலும், "கோடுதலைச் செய்யும்" என்னுங் கருத்தில் ஒருசிறப்பு மின்மையானும், அது உரையன்மை அறிக.