பக்கம் எண் :

வழுத்தினா டும்மினே னாக வழித்தழுதாள்
யாருள்ளித் தும்மினீ ரென்று.

 

(இதுவுமது)

தும்மினேனாக வழுத்தினான் - என்னொடு கூட இருந்தவள் யான் தும்மினேனாக வழக்கம்போல் ' நீடு வாழ்க ' என்று வாழ்த்தினாள் ; அழித்து யார் உள்ளித் தும்மினீர் என்று அழுதாள் - அங்ஙனம் வாழ்த்தியவளே தன் கருத்தை மாற்றி, நும்மாற்காதலிக்கப்பட்ட மகளிருள் யார் நினைத்ததனால் தும்மினீர் என்று சொல்லி யழுதாள்.

அன்பரால் நினைக்கப்பட்டவர்க்குத் தும்மலெழும் என்பது மகளிர் குருட்டுக்கொள்கை. அதை மெய்ந் நெறிக் கொள்கையாகக் கொண்டு புலந்தாள் என்பதாம். வழுத்து என்னுஞ்சொல் வாழ்த்துதற்பொருளில், வந்தது. வாழ்த்துதலும் புலத்தலும் தம்முள் இயையாமையின், 'அழித்து ' என்றான்.