பக்கம் எண் :

தன்னை யுணர்த்தினுங் காயும் பிறர்க்குநீ
ரிந்நீர ராகுதி ரென்று.

 

(இதுவுமது)

தன்னை உணர்த்தினும் - இவ்வகையிற் கரணகமின்றி யூடிய தன்னை யான் பணிந்துரைத்து ஊடல் தீர்க்குங்காலும், பிறர்க்கும் நீர் இந்நீரர் ஆகுதிர் என்று காயும் - பிறமகளிர்க்கும் நீர் அவரூடியவிடத்து இவ்வாறே பணிந்துணர்த்துந் தன்மையையுடையீராகுதிர் என்று சினங்கொள்வாள்.

இவள் நான் தெளிவித்த விடத்துந் தெளியாமை பற்றி, வேறு வழியில்லாது, என்மேல் இட்டேற்றிய பொய்யான தவற்றையும் உடம்பட்டுப் பணிந்தேன். ஆனால், நான் எதிர்பாராவண்ணம் அதுவும் புலத்தற் கேதுவாய் முடிந்தது. இனி இவள்பாற் செய்யத் தக்க தென்னவென்று தெரியாது மயங்கித் தியங்குகின்றேன் என்பதாம்.