பக்கம் எண் :

நினைத்திருந்து நோக்கினுங் காயு மனைத்துநீர்
யாருள்ளி நோக்கினீ ரென்று.

 

(இதுவுமது)

நினைத்து இருந்து நோக்கினும் காயும் - நான் என்ன சொல்லினும் என்ன செய்யினும் அவற்றிற் குற்றங் காணுதலால் அவற்றை ஒழிந்திருந்து, தன் உறுப்புக்களின் ஒப்பில்லா வழகை நினைந்து அவற்றையே வியந்து நோக்கினும், என்னைச் சினந்து கொள்வாள்; அனைத்தும் நீர் நோக்கினீர் யார் உள்ளி என்று - என் உறுப்புக்களெல்லாவற்றையும் நோக்கினீர், அவற்றின் ஒப்புமையால் எம்மகளிரை நினைந்து என்று வினவி.

நான் எல்லாவுறுப்புக்களாலும் ஒருத்தியை ஒத்திருத்தல் முடியாது. ஒவ்வோருறுப்போடும் ஒவ்வொருத்தியின் உறுப்பை ஒப்பு நோக்கின், அத்தனை யுறுப்பிற்கும் அத்தனை மகளிர் வேண்டுமே! அவரெல்லாரையும் இன்னின்னாரென்று இன்னே எனக்குச் சொல்ல வேண்டும் என்னுங் கருத்தால் ' அனைத்து நோக்கினீர் யாருள்ளி ' என்றாள். அவளையே பார்த்து மகிழ்தலுங் குற்றமாயிற்றென்பதாம்.