பக்கம் எண் :

இன்பத்துப் பால்
கற்பியல்

அதிகாரம் 133. ஊடலுவகை

அஃதாவது, அத்தகைய வூடலால் தமக்குக் கூடலின்பஞ் சிறந்தவிடத்து, அச்சிறப்பிற் கேதுவான வூடலைத் தலைமகனுந் தலைமகளும் உவத்தல். உவத்தல் - விரும்பி மகிழ்தல். இவ்வதிகாரம் ஊடலுவகை யென்று பெயர் பெற்றிருப்பினும்.

"துனியும் புலவியு மில்லாயிற் காமங்
கனியுங் கருக்காயு மற்று."

(1306)

என்றதனால், புலவிக்கு அடுத்திருப்பதும் துன்பத்திற் கேதுவானதுமான துனியச்சம் எள்ளளவு மில்லாதிருத்தல் வேண்டுமென்பது பற்றியே, புலவியுவகையை ஊடலுவகையென்று குறித்தாரெனக் கொள்ளலாம். இனி விரைந்து பழுத்துவிடும் பழக்காய்போலப் புலவி நிலையடையும் ஊடல் முதிர்ச்சியெனக் கொள்ளினுமாம்.

 

இல்லை தவறவர்க் காயினு மூடுதல்
வல்ல தவரளிக்கு மாறு.

 

(தலைமகள் கரணகமின்றிப் புலக்கின்றமை கேட்ட தோழி, அங்ஙனம் நீ புலக்கின்ற தென்னை யென்றாட்கு அவள் சொல்லியது.)

அவர்க்குத் தவறு இல்லையாயினும் - காதலர் பால் தவறில்லையாயினும்; அவர் அளிக்கும் ஆறு ஊடுதல் வல்லது - அவர் நம்மோடு செய்யும் பேரின்பக் கூட்டம் இங்ஙனம் அவரோடூடுதலை விளைக்கும் வலிமையுள்ளதாக விருக்கின்றது.

எல்லையில்லாத இன்பந்தருபவராயிருத்தலின், யான் பெறும் இப்பேரின்பம் பிற மகளிரும் பெறுவரெனக் கருதி, அது பொறாமையால் இவ்வூடல் நிகழ்கின்ற தென்பதாம். ' அவர்க்கு ' வேற்றுமை மயக்கம்; நாலாவது ஏழாவதில் மயங்கிற்று. உம்மை ஒத்துக்கொள்வுப் பொருளது.