பக்கம் எண் :

ஊடலிற் றோன்றுஞ் சிறுதுனி நல்லளி
வாடினும் பாடு பெறும்.

 

(புலவாக்காலும் அத்தலையளி பெறலாயிருக்க, இப்புலவியால் வருத்துவ தென்னையென்ற தோழிக்கு அவள் சொல்லியது.)

ஊடலின் தோன்றும் சிறுதுனி - ஊடல் கரணகமாக என்கண் தோன்றும் சிறு சடைவினால், நல் அளி வாடினும் பாடு பெறும் - காதலர் செய்யும் நல்ல தலையளி சற்று வாடுமாயினும் பின்பு பெருமை பெறும்.

தவறில்லாவிடத்து நிகழ்கின்ற வூடல் விரைந்து நீங்குதலின் ' சிறுதுனி ' யென்றும், ஆராமை பற்றி நிகழ்தலின் நல்லளி மாபெரும்பாலும் வாடாதென்பாள் ' வாடினும் ' என்றும், ஒருகால் சற்று வாடினும் அதனாற் பேரின்பம் விளையுமென்பாள் 'பாடுபெறும்' என்றும், கூறினாள். சிறுதுனியாற் பெரும்பயன் விளைதலின் அது வருத்தமெனப்படாதென்பதாம். தலையளி யென்பது பேரின்பக் கலவிக் கூட்டம். எதிர்மறையும்மை அருமைப் பொருளது.