பக்கம் எண் :

உணலினு முண்ட தறலினிது காமம்
புணர்தலி னூட லினிது.

 

(இதுவுமது)

உணலினும் உண்டது அறல் இனிது- மாந்தர்க்கு உணவுத்துறையில், பின்னுண்பதினும் முன்னுண்டது செரித்தல் இன்பந்தருவதாம்; காமம் புணர்தலின் ஊடல் இனிது - அதுபோல அவர்க்குக் காமவின்பத் துறையில் , மேற்புணர்வதினும் முன்னைத் தவறுபற்றி மகளிரூடுதல் இன்பந்தருவதாம்.

பசித் துண்ணுமிடத்து இன்சுவைத்தும் மிகவுண்ணலுமாயிருத்தல்போல், ஊடலாற் பிரிந்து கூடுமிடத்துப் பேரின்பத்தும், ஆராமையுள்ளது மாயிருக்குமென்று தன் பட்டறிவு கூறியவாறு.