பக்கம் எண் :

ஊடலிற் றோற்றாவர் வென்றா ரதுமன்னுங்
கூடலிற் காணப் படும்.

 

(இதுவுமது)

ஊடலில் தோற்றவர் வென்றார் - ஊடலில் தோற்ற மகளிர் வென்றவராவர்; அது மன்னும் கூடலிற் காணப்படும்- அவ்வெற்றி மிகுதியும் பின்னர்ப் புணர்ச்சிக்கண் அவரால் அறியப்படும்.

தோற்றவர் ஊடலைக் கடைப்பிடிக்காது இடையில் விட்டு விட்டவர். அவர் கலவிக்கண் பேரின்பம் பெறுதலால் வென்றாராயினர். 'மன்' மிகுதிப் பொருளது.தலைமகன் கலவியால் பேரின்பம் பேறும்போதே தலைமகளும் பெறுதல் கண்டானாதலாலும், அவள் ஊடல் நீங்கிய பொழுது ஒருவகைத் தோல்வி மனப்பான்மை கொண்டிருந்ததனாலும் , அவளைப் பாராட்டி ஊக்குமுகமாகத் 'தோற்றவர் வென்றார்' என்றான். ஊடல் ஆடவருக்கின்மையின், தலைமகன் ஊடலில் தோற்றானென்று கூறுவது பெருந்திணையாகுமேயன்றி அன்பினைந்திணையாகாதென அறிக. அடுத்த குறளையும் பார்க்க.