பக்கம் எண் :

ஊடுக மன்னோ வொளியிழை யாமிரப்ப
நீடுக மன்னோ விரா.

 

(இதுவுமது)

ஒளியிழை மன் ஊடுக - ஒளி வீசும் அணிகலங்களையுடையாள் இன்னும் எம்மொடு மிகுதியும் ஊடுவாளாக; யாம் இரப்ப இரா மன் நீடுக- அவள் அங்ஙனம் ஊடுதற்கும் யாம் அதை யுணர்த்தும் பொருட்டு அவளை இரந்து நிற்றற்கும் போதிய அளவு காலமிருக்கும் வகை இவ்விரவு மிகுதியும் நீடுவதாக.

'ஊடுக' , 'நீடுக' என்பன ஆர்வ வியங்கோள் வினைகள். 'மன்' மிகுதிப்பொருளது ஓகாரங்கள் அசைநிலை. 'ஒளியிழை' அன்மொழித்தொகை. பின்னர்ப் பேரின்பம் பெறக் கூடுதல் உறுதியாதலின், அவ்விராமுழுதும் ஊடலே நிகழினும் நன்றேயென்பதாம்.