பக்கம் எண் :

ஒழுக்க முடைமை குடிமை யிழுக்க
மிழிந்த பிறப்பாய் விடும் .

 

ஒழுக்கமுடைமை குடிமை - நல்லொழுக்க முடைமையே உயர்குலத் தன்மையாம் ; இழுக்கம் இழிந்த பிறப்பு ஆய்விடும் - தீயொழுக்கம் தாழ்ந்த குலமாகிவிடும் .

குடி என்னும் சொல் தலைக்கட்டு , குடும்பம் , சரவடி (கோத்திரம் ) , குலம் , குடிகள் ( நாட்டினம் ) என்னும் ஐவகை மக்கட் கூட்டத்தையுங்குறிக்கும் . இங்குக் குடியென்றது நிலத்தை . குலமாவது ஒரே தொழில் செய்யும் மக்கள் வகுப்பு . வரணம் என்பது ஆரியர் வந்தபின் நிறம்பற்றியும் பிறப்புப்பற்றியும் ஏற்படுத்தப்பட்ட ஆரிய வகுப்புப் பிரிவினையாதலால் , அது " யாதும் ஊரே யாவருங் கேளிர் " , " குலமும் ஒன்றே குடியும் ஒன்றே " , "பிறப்பொக்கும் எல்லா வுயிர்க்கும் " என்னும் தமிழ்க் கொள்கைக்கும் , அதைத் தழுவிய வள்ளுவர் கருத்திற்கும் ஏற்காது . ஆகவே , தமிழ வொழுக்கங்கெடின் பிராமணனுந் தாழ்ந்தவனாவான் என்பதே வள்ளுவர் கருத்தாம் .