பக்கம் எண் :

ஊடுதல் காமத்திற் கின்ப மதற்கின்பங்
கூடி முயங்கப் பெறின்.

 

(இதுவுமது)

காமத்திற்கு இன்பம் ஊடுதல் - காம நுகர்ச்சிக்கின்பமாவது, நுகர்வதற்குரிய காதலன் காதலியாகிய இருவருட் காதலி காதலன்பாற் குற்ற முள்ள விடத்தும் இல்லா விடத்தும் அவனொடு ஊடுதல் ; அதற்கு இன்பம் கூடி முயங்கப் பெறின் - அவ்வூடுதற் கின்பமாவது அதனை அள வறிந்து நீக்கிக் காதலன் காதலியிருவரும் தம்முட் கூடித் தழுவப் பெறின் அத்தழுவல்.

கூடுதல் கருத்தொத்தல். தழுவுதல் இங்குப் புணர்தல். துனிநிலையில் துன்பம் பயத்தலானும், ஊடல் நிலையில் இன்பம் பயவாமையானும், இரண்டிற்கும் இடைப்பட்ட புலவி நிலையை நீள விடாது அளவறிந்து நீக்கிக் கூடி , அளவில்லாத இன்பம் பெறுதல் அரி தென்பது பற்றிக் 'கூடி முயங்கப் பெறின்' என்றான். அவ்வீரின்பமும் யான் பெற்றே னென்பதாம்.

ஈண்டுப் பிரிவினை வடநூன் மதம் பற்றிச் செலவு ஆற்றாமை விதுப்புப் புலவி யென நால்வகைத் தாக்கிக் கூறினார். அவற்றுட் செலவு பிரிவாற்றாமையுள்ளும், ஆற்றாமை படர் மெலிந்திரங்கன் முதல் நிறையழித லீறாயவற்றுள்ளும், விதுப்பு அவர்வயின் விதும்பன் முதற் புணர்ச்சி விதும்ப லீறாயவற்றுள்ளும், புலவி நெஞ்சொடு புலத்தன் முதல் ஊடலுவகை யீறாயவற்றுள்ளுங் கண்டு கொள்க. அஃதேல், வடநூலார் இவற்றுடனே சாபத்தினானாய நீக்கத்தினையுங் கூட்டிப் பிரிவினை ஐவகைத் தென்றா ராலெனின் , அஃது அறம் பொருளின்ப மென்னும் பயன்களுள் ஒன்று பற்றிய பிரிவின்மையானும், முனிவராணையான் ஒருகாலத்தோர் குற்றத் துளதாவதல்லது உலகியல்பாய் வாராமையானும் ஈண்டொழிக்கப் பட்டதென்க.' என்று பரிமேலழகர் தம் உரை முகத்துப் போன்றே அதன் புறத்திலும் ஆரிய நஞ்சைக் கொட்டி வைத்துள்ளார். இன்பத்துப் பாலின் இரண்டாம் இயல் கற்பியல் என்பதே யன்றிப் பிரிவியல் என்பதன்று. மேலும், திருவள்ளுவர் வடநூலைப் பின்பற்ற வில்லை யென்பதை,அவர் வடநூலார் கூறும் சாபப் பிரிவினையைக் கூறவில்லை யென்று பரிமேலழகரே தன் முரணாகக் கூறியிருப்பதினின்று தெளிந்து கொள்க.

கற்பியல் முற்றிற்று.

இன்பத்துப்பால் முற்றிற்று.

திருக்குறள் தமிழ் மரபுரை முற்றுப்பெற்றது.