பக்கம் எண் :

அறத்துப் பால்
இல்லறவியல்

அதிகாரம் 15. பிறனில்விழையாமை

அஃதாவது காமமயக்கத்தாலும் , அழகுள்ள பெண்டிர் பலரொடு கூடி இன்பம் நுகரவேண்டுமென்னும் ஆசையாலும் , பிறன் மனைவியை விரும்பாமை . இஃது ஒழுக்கத்திற் சிறந்தாரிடத்திலேயே நிகழ்வதாகலின் , ஒழுக்கமுடைமையின் பின் வைக்கப்பட்டது .

 

பிறன்பொருளாட் பெட்டொழுகும் பேதைமை ஞாலத்
தறம்பொருள் கண்டார்க ணில்.

 

பிறன் பொருளாள் பெட்டு ஒழுகும் பேதைமை - வேறொருவன் உடமையாகவுள்ளவளைக் காதலித் தொழுகும் மடைமை ; ஞாலத்து அறம்பொருள் கண்டார்கண் இல் - நிலவுலகத்தில் அறநூலையும் , பொருள்நூலையுங் கற்றுத் தெளிந்தவரிடம் இல்லை .

பிறன் மனைவியைக் காதலிப்பவர் , இம்மைக்குரியனவும் மாந்தனுக்கு உறுதிபயப்பனவுமான அறம் பொருளின்பம் என்னும் மூன்றனுள் இன்பம் ஒன்றையே கருதியவர் என்பதை உணர்த்தற்கு , ' அறம் பொருள் கண்டார்கணில் ' என்றார்.

பொருள்நூலை அறியாததினால் பிறன் மனைவி பிறன் பொருளென்பதும் , அறநூலை யறிதாததினால் பிறன் பொருளை நுகர்தல் தீவினை யென்பதும் , தெரியாதுபோயின . அறம் பொருள் என்பன கருமிய ( காரிய) வாகுபெயர் . எண்ணும்மை தொக்கது . பூமி என்னும் வடசொல் வழங்கவே , ஞாலம் என்னும் தென்சொல் வழக்கற்றது . பேதைமை என்பது நல்லதை விட்டுவிட்டுத் தீயதைத் தெரிந்துகொள்ளுந் தன்மை .