பக்கம் எண் :

அறத்துப் பால்
இல்லறவியல்

அதிகாரம் 16. பொறையுடைமை

அஃதாவது, தெரிந்தோ தெரியாமலோ பிறர் தமக்குச் செய்த சிறியவும் பெரியவுமான தீங்குகளை யெல்லாம் திருப்பிச் செய்யாதும், அவற்றிற்காக அவரைத் தண்டியாதும், பொறுத்துக் கொள்ளுதல். பெருங்குற்றமாயினும் பொறுத்துக் கொள்ள வேண்டுமென்றற்கு, இது பிறனில் விழையாமையின் பின் வைக்கப்பட்டது.

 

அகழ்வாரைத் தாங்கும் நிலம் போல, தம்மை
இகழ்வார்ப் பொறுத்தல் தலை.

 

அகழ்வாரைத் தாங்கு நிலம்போல - தன்னைத் தோண்டுவாரை விழாமல் தாங்கும் நிலம்போல;தம்மை இகழ்வார்ப் பொறுத்தல் தலை - தம்மை மதியாது தீங்கு செய்தாரைப் பொறுத்தல் தலையாய அறமாம்.

இகழ்தல் புகழ்தலுக்கு எதிர். அது இங்கு மதியாது சொல்லும் சொல்லை மட்டுமன்றிச் செய்யுஞ் செயலையுங் குறித்தது.