பக்கம் எண் :

பொறுத்த லிறப்பினை யென்று மதனை
மறத்த லதனினு நன்று.

 

இறப்பினை என்றும் பொறுத்தல் - பொறை நன்றாதலால் , பிறர் செய்த மிகையை எக்காலத்தும் பொறுத்துக் கொள்க; அதனை மறத்தல் அதனினும் நன்று - இனி , அதை மனத்திற் கொள்ளாது அப்பொழுதே அடியோடு மறக்க முடியுமாயின் அது அப்பொறையினும் நன்றாம்.

பழிக்குப் பழி வாங்கக்கூடிய அல்லது தீங்கு செய்தாரைத் தண்டிக்கக் கூடிய காலத்துப் பொறுத்துக் கொள்ளுதலே உண்மையான பொறையாதலின், அக்காலமும் அடங்க 'என்றும்' என்றார். இறப்பு சொல்லிலும் செயலிலும் நெறி கடந்த நடத்தை. அதைப் பொறுத்த காலத்தும் அது உள்ளத்திலிருத்தலால் , மறத்தல் அதனினும் நன்றென்றார். மறத்தலாவது தீங்கு செய்தாரை நட்பாகக் கருதுதலும் அவருக்கு நன்மை செய்தலும். 'பொறுத்தல்' வியங்கோள் வினை.