பக்கம் எண் :

இன்மையு ளின்மை விருந்தொரால் வன்மையுள்
வன்மை மடவார்ப் பொறை.

 

இன்மையுள் இன்மை விருந்து ஒரால் - ஒருவனுக்கு வறுமையுள் வறுமையாவது விருந்தினரை ஏற்றுக் கொள்ளாது விடுதல் ; வன்மையுள் வன்மை மடவார்ப் பொறை - அதுபோல வலிமையுள் வலிமையாவது அறிவிலார் செய்த மிகையைப் பொறுத்துக் கொள்ளுதல்.

இது ஓர் உவமியத்திற்கு வேறோர் உவமியத்தை உவமமாக்கிய எடுத்துக் காட்டுவமை. ஒரால்-ஒருவுதல். உவமியம் பொருள்.