பக்கம் எண் :

கொடுப்ப தழுக்கறுப்பான் சுற்ற முடுப்பதூஉ
முண்பதூஉ மின்றிக் கெடும்.

 

கொடுப்பது அழுக்கறுப்பான் சுற்றம்-ஒருவன் பிறர்க்குக் கொடுப்பதைப் பொறாமையால் தடுப்பவன் மட்டு மன்றி அவன் உறவினரும்; உண்பதும் உடுப்பதும் இன்றிக் கெடும்-உண்ணும் பொருளும் உடுக்கும் பொருளு மின்றிக் கெடுவர்.

சுற்றமும் என்னும் எச்சவும்மை தொக்கது. ஒரு செல்வனது பொருளைக் கண்டு பொறாமைப் படுவதினும் ஒரு செல்வன் ஓர் ஏழைக்குக் கொடுப்பதைப் பொறாமையால் தடுப்பது மிகக் கொடியதாதலின், அக் கொடுமை செய்தவன் தன் சுற்றத்தோடும் உண்பதும் உடுப்பதுமின்றிக் கெடுவான் என்றார். இவ் விளைவு பொறாமைக் குற்றத்தோடு ஏழை வயிற்றெரிச்சலும் கூடுவதால் நேர்வது. ஊணுடை யென்னாது உண்பது முடுப்பதும் என்றமையால், உண்ணத்தக்கனவும் உடுக்கத்தக்கனவுமான எவ்வகைப் பொருளையுமிழப்பர் என்பது பெறப்படும். 'சுற்றம்' தொழிலாகு பெயர். சுற்றியிருக்கும் இனம் சுற்றம். அளபெடை ஈரிடத்தும் இன்னிசை பற்றியது.