பக்கம் எண் :

அறத்துப் பால்
இல்லறவியல்

அதிகாரம் 18. வெஃகாமை

அஃதாவது, பிறர் பொருள்மேல் ஆசைகொள்ளாமை. பொறாமையினாற் பிறர் பொருளைக் கவர விரும்புவது இயல்பாதலால், இது கூடாதென்பதற்கு அழுக்காறாமையின் பின் வைக்கப்பட்டது. வெள்-வெள்கு-வெஃகு. வெள்ளுதல் விரும்புதல்.

 

நடுவின்றி நன்பொருள் வெஃகிற் குடிபொன்றிக்
குற்றமு மாங்கே தரும்.

 

நடுவு இன்றி நல் பொருள் வெஃகின்-பிறர் பொருளையும் தம்பொருள்போற் கருதும் நடுவுநிலைமையில்லாது அவரது நற்செல்வத்தின்மேல் ஒருவன் ஆசைவைப்பின்; குடிபொன்றி - அவன் குடிகெட்டு; குற்றமும் ஆங்கே தரும் - அத்தீய ஆசைவைப்பு அவனுக்கு மறுமைத் துன்பத்திற்கேதுவாகிய தீவினைக் குற்றத்தையும் உண்டாக்கும்.

அறவழியில் ஈட்டப்பட்டு நல்வழியிற் செலவிடப்பெறும் செல்வத்தை 'நன்பொருள்' என்றார். பொன்றி என்பது பொன்றியபின் என்னும் பொருளது.