பக்கம் எண் :

அருள்வெஃகி யாற்றின்க ணின்றான் பொருள்வெஃகிப்
பொல்லாத சூழக் கெடும்.

 

அருள்வெஃகி ஆற்றின்கண் நின்றான் - அன்பை மட்டுமன்றி அருளையும் விரும்பி இல்லறத்தின்கண் நின்றவன் , பொருள் வெஃகிப் பொல்லாத சூழக் கெடும் - பிறர் பொருளைவிரும்பி அதைக் கைப்பற்றத் தீய வழிகளை ஆராய்ந்தெண்ணிய மட்டிற்கெட்டு விடுவான்.

விருந்தோம்பல் ஒப்புரவொழுகல் ஈகை ஆகிய அறங்கட்கு அன்பும் , இரப்போர்க்கீதற்கு அருளும் வேண்டியிருப்பதால் , இல்லறமும் ஓரளவு அருள்நெறிப்பட்டதாம். ஆதலால் , இல்லறத்தைத் துறவறத்திற்கு ஆறென்று பரிமேலழகர் கூறியது முழுதும் பொருந்தாது. சூழ்வு வெளிப்பட்டவுடன் பொருளையிழக்க விருந்தாரால் தீங்குநேர்தலின் , 'சூழக்கெடும்' என்றார்.