பக்கம் எண் :

அறத்துப் பால்
இல்லறவியல்

அதிகாரம் 19. புறங்கூறாமை.

அஃதாவது, ஒருவரில்லாதவிடத்து அவரைப் பற்றித் தீதாகப் பேசுதல். புறம் முதுகு அல்லது பின்பக்கம். ஒருவரில்லாத இடம் அவருக்குத் தெரியாத முதுகுப் பக்கம் போன்றிருத்தலால் புறம் எனப்பட்டது. புறத்திற் கூறுவது புறங்கூறுதல். அது புறம் எனவும்படும். அன்று அது இடவாகு பெயர்.

புறங்கூறுதல், கோட் சொல்லுவதும் குண்டுணி பேசுவதும் என இரு வகைத்து. ஓர் அதிகாரியினிடத்தில் ஒரு பணியாளனைப் பற்றித தீதாகச் சொல்வது கோள். சோம்பேறிகள் பலர், சிறப்பாக வேலையொழிந்த பெண்டிர், ஒருவரைப் பற்றித் தீதாகப்பேசி மகிழ்வது குண்டுணி. கோள் குறளை யெனவும்படும்.

இலக்கிய வழக்கிற் பெரும்பாலும் கோட் சொல்லுவதைக் குறிக்கும் புறங்கூற்று, ஒருவரின் பதவியை அல்லது வேலையைப் பொறாமையால் அல்லது தன்னலத்தால் வெஃகி அதைப் பறிப்பதற்கு நிகழ்வதாயிருத்தலால், அதைக் கண்டித்தற்குப் புறங்கூறாமை வெஃகாமையின் பின் வைக்கப்பட்டது.

 

அறங்கூறா னல்ல செயினு மொருவன்
புறங்கூறா னென்ற லினிது.

 

ஒருவன் அறம் கூறான் அல்ல செயினும் - ஒருவன் அறம் என்னுஞ் சொல்லையுஞ் சொல்லாது அறமல்லாதவற்றைச் செய்யினும்; புறங்கூறான் என்றல் இனிது - ஒருவரையும் பற்றிப் புறங்கூறான் என்று உலகத்தாராற் சொல்லப்படுதல் நன்றாம்.

புறங்கூறாமை அக்குற்றங்களினும் மேம்பட்டுத் தோன்றும் என்பதாம்.