பக்கம் எண் :

அறனழீஇ யல்லவை செய்தலிற் றீதே
புறனழீஇப் பொய்த்து நகை.

 

புறன் அழீஇப் பொய்த்து நகை - ஒருவனைக்காணாவிடத்துப் பழித்துரையால் அழித்துக் கூறிக் கண்டவிடத்து அவனோடு பொய்யாகச் சிரித்து முகமலர்தல்; அறன் அழீஇ அல்லவை செய்தலின் தீது - அறம் என்றே ஒன்றுமில்லையென அழித்துக்கூறி அறமல்லாதவற்றைச் செய்தலினுந் தீயதாம்.

அறனழித்தலினும் புறனழித்தலும் அல்லவை செய்தலினும் பொய்த்து நகையும் தீதென நிரனிறையாகக் கொள்க. பழித்துரையால் அழித்தலாவது பெயரைக் கெடுத்தல். ' அழீஇ' ஈரிடத்தும் பிறவினைப் பொருளில் வந்த சொல்லிசையளபெடை.