பக்கம் எண் :

அறஞ்சொல்லு நெஞ்சத்தா னன்மை புறஞ்சொல்லும்
புன்மையாற் காணப் படும்.

 

அறம் சொல்லும் நெஞ்சத்தான் அன்மை - புறங்கூறுவா னொருவன் அறம் நல்ல தென்று சொல்லினும், அவன் அதை நெஞ்சாரச் சொல்கின்றானல்லன் என்னும் உண்மை; புறஞ் சொல்லும் புன்மையாற் காணப்படும் - அவன் புறஞ் சொல்லுதற்குக் கரணியமான சிறுதன்மையால் அறியப்படும்.

மனந்திருந்தாமையால் அவன் சொல் நம்பப்பெறா தென்பதாம். இனி, அறம் நல்ல தென்று ஒருவனது மனச்சான்று ஒப்புக் கொள்ளினும், வழக்கத்தினாலும் விருப்பினாலும் நெஞ்சுரமின்மையாலும் அவன் அதற்கு மாறாக ஒழுகலாமாகலின், ' அறங் கூறும் நெஞ்சத்தானன்மை' என்பதற்கு, அறத்தின் தன்மையைப் பற்றிக் கூறித் தகுதியுள்ள மனத்தானல்லாமை என்று உரைப்பினு மமையும்.