பக்கம் எண் :

பகச்சொல்லிக் கேளிர்ப் பிரிப்பர் நகச்சொல்லி
நட்பாட றேற்றா தவர்.

 

நகச் சொல்லி நட்பாடல் தேற்றாதவர் - மகிழுமாறு இனிய சொற்களைச் சொல்லி அயலாரோடும் நட்பாடல் தமக்கு நன்றென்று தெளியாத புறங்கூற்றாளர்; பகச் சொல்லிக் கேளிர்ப் பிரிப்பர் - பிளவுண்டாகுமாறு புறங்கூறித் தம் உறவினரையும் தம்மை விட்டுப் பிரியப்பண்ணுவர்.

கேளிரையும் என்னும் சிறப்பும்மை தொக்கது. நட்பாடல் என்னுங் குறிப்பால் அயலாரோடும் என்பது வருவிக்கப்பட்டது. அவ்வும்மை எச்சவும்மை. தம் கேளிர் என்னாது கேளிர் என்று மட்டுங் குறித்ததினால், பிறரினத்தார்க்குள்ளும் புறங்கூற்றாற் பிரிவினையுண்டாக்குவர் என்பது பெறப்படும். இங்ஙனம் எல்லார்க்கும் பொல்லாதவராவர் என்பது கருத்து. தேறாதவர் என்னும் தன்வினை தேற்றாதவர் என்று பிறவினை வடிவில் நின்றது, "கனவிலுந்தேற்றாதார் மாட்டு" (குறள்: 1054) என்புழிப்போல.