பக்கம் எண் :

துன்னியார் குற்றமுந் தூற்று மரபினா
ரென்னைகொ லேதிலார் மாட்டு?.

 

துன்னியார் குற்றமும் தூற்றும் மரபினார் - தம் நெருங்கிய வுறவினர் குற்றத்தையும் அவர்புறத்துத் தூற்றும் இயல்புடைய வன்னெஞ்சர்; ஏதிலார் மாட்டு என்னை கொல் - அயலார் செய்தியில் எத்தகையவராவார்.

'குற்றமும்' என்பது துன்னியாரை நோக்கிய சிறப்பும்மை, தூற்றுதல் என்பது களத்திற் பொலி தூற்றுதல்போலப் பலருமறியப் பரப்புதல். மிகக் கொடியவராவர் என்பது பற்றியும் அறியப்படாமை பற்றியும் 'என்னை கொல்' என்றார். 'என்னர் கொல்' என்னும் பாடமும் ஏற்றதே. 'கொல்' ஐயம்.