பக்கம் எண் :

அறனோக்கி யாற்றுங்கொல் வையம் புறனோக்கிப்
புன்சொ லுரைப்பான் பொறை.

 

புறன் நோக்கிப் புன்சொல் உரைப்பான் பொறை - பிறர் இல்லாத சமயம் பார்த்து அவரைப் பழித்துரைக்கும் புறங் கூற்றாளனது உடலைப் பொறுத்தலை; வையம் அறன்நோக்கி ஆற்றுங்கொல் - மாநிலம் தனக்கு அறமென்று கருதிச் செய்யும் போலும்!

தன்னை அகழ்வாரைப் தாங்கும் நிலத்திற்கும் புறங்கூற்றாளன் உடலைச் சுமத்தல் அரிதென்னுங் கருத்தால். 'அறனோக்கி யாற்றுங் கொல்' என்றார். பொறை என்னும் சொல் இங்குச் சுமத்தலும் பொறுத்துக்கொள்ளுதலுமாகிய இரு பொருளையும் ஒருங்கே தழுவிய தாம். 'கொல்' ஐயங்கலந்த உய்த்துணர்வு.