பக்கம் எண் :

தானந் தவமிரண்டுந் தங்கா வியனுலகம்
வானம் வழங்கா தெனின்.

 

வானம் வழங்காதெனின் - மழை பெய்யாவிடின்; வியன் உலகம் தானம் தவம் இரண்டும் தங்கா-இப் பரந்தவுலகின்கண் அறக்கொடையும் தவமும் ஆகிய இருவகை நல்வினைகளும் செய்யப்பெறா.

தானம் என்பது, நல்வழியில் ஈட்டப்பட்ட பொருளை, தெய்வப் பற்றுக் கரணியமாகக் கோவிற்கும் அடியார்க்கும் , அருளுடைமை கரணியமாக இரப்போர்க்கும், ஈடின்றிக் கொடுத்தல். தவம் என்பது ஐம்புலவடக்கம் பற்றித் துறவறத்தார் கடுமையாகவும், மகப்பேறு முதலியன கருதி இல்லறத்தார் எளிமையாகவும், உடலை வருத்துதல். கடுமையாக வருத்தும் வகைகள் துறவறவியலிற் கூறப்பெறும், எளிமையாக வருத்தும் வகைகள் உண்டி சுருக்குதல், எளிய வுடையுடுத்தல், இன்பம் விலக்கல் முதலியன.

"மகன்றந்தைக் காற்று முதவி யிவன்றந்தை
யென்னோற்றான் கொல்லெனுஞ் சொல்."


என்று திருவள்ளுவரும்,

"முந்தித் தவங்கிடந்து முந்நூறு நாட்சுமந்து" என்று பட்டினத்தடிகளும் பாடியிருப்பதால், தவம் துறவறத்தின் மேலதென்று வரையறுப்பது பொருந்தாது. தானம் பிறர்க்குக்கொடுப்பது; தவம் தன்னை ஒடுக்குவது.

தானம் என்பது தென்சொல்லென்பதை என் 'வடமொழி வரலாறு' என்னும் நூலிற் கண்டு தெளிக.