பக்கம் எண் :

ஏதிலார் குற்றம்போற் றங்குற்றங் காண்கிற்பிற்
றீதுண்டோ மன்னு முயிர்க்கு.

 

ஏதிலார் குற்றம்போல் தம் குற்றம் காண்கிற்பின் - புறங்கூறுவார் தாம் காணும் பிறர் குற்றம்போல் தம்குற்றத்தையுங் காணவல்லராயின்; மன்னும் உயிர்க்கு தீது உண்டோ - நிலைபெற்ற மக்களுயிர்க்கு வரக்கூடிய துன்பமுண்டோ ?

அயலாரையும் பகைவரையுங் குறிக்கும் ஏதிலார் என்னும் சொல், இங்குப்பிறர் என்னும் பொருட்டாய் நின்றது. பிறர் குற்றம் போல் தம் குற்றமுங் காண்டலருமை நோக்கிக் 'காண்கிற்பின்' என்றார். கண்டவழித் தீவினை நிகழாதாதலின் அதனால் துன்பமுமிராதென்பதாம். 'கில்' ஆற்றலுணர்த்தும் இடைநிலை. இனி , காண்கின்பின் என்று பிரிப்பினும் அமையும். உடல்நில்லா தொழியவும் உயிர் நிலைபெற்று நிற்றலால் மன்னுமுயிர் என்றார்.