பக்கம் எண் :

கற்றதனா லாய பயனென்கொல் வாலறிவ
னற்றா டொழாஅ ரெனின்.

 

வால் அறிவன் நல்தாள் தொழார் எனின் - தூய அறிவையுடைய இறைவனின் நல்ல திருவடிகளைத் தொழாதவராயின்; கற்றதனால் ஆய பயன் என் - நூல்களைக் கற்றவர்க்கு அக்கல்வியால் உண்டான பயன் யாதாம்?

அஃறிணை யிருபாற் பொதுவான எவன் என்னும் வினாப்பெயர் 'என்' என்று தொக்கு இங்கு இன்மை குறித்தது. கொல் என்பது அசைநிலை. தூய அறிவாவது இயற்கையாகவும் முழுநிறைவாகவும் ஐயந்திரிபற்றும் இருப்பது. தமிழக மருந்துகள் பெரும்பாலும் தழையுந் தண்டு மாயிருத்தலின், பிறவிப்பிணிக்கு மருந்தாகும் குறிப்புப்பட இறைவன் திருவடிகளை நற்றாள் என்றார். 'தொழாஅர்' இசை நிறையளபெடை.

கல்வியின் சிறந்த பயன் கடவுளை வழிபட்டுப் பேரின்ப வீடு பெறுவதென்பதே பண்டையறிஞர் கொள்கை.

"ஆண்டவனுக்கு அஞ்சுவதே அறிவின் தொடக்கம்". என்றார் சாலொமோன் ஓதியார் (ஞானியார்.)

"எழுத்தறியத் தீரும் இழிதகைமை தீர்ந்தான்
மொழித்திறத்தின் முட்டறுப்பா னாகும் - மொழித்திறத்தின்
முட்டறுத்த நல்லோன் முதனூற் பொருளுணர்ந்து
கட்டறுத்து வீடு பெறும்."


என்பது பழஞ் செய்யுள்.

"கற்பக் கழிமடம் அஃகும் மடமஃகப்
புற்கந்தீர்ந் திவ்வுலகிற் கோளுணரும் - கோளுணர்ந்தால்
தத்துவ மான நெறிபடரும் அந்நெறியே
இப்பால் உலகத் திசைநிறீஇ யுப்பால்
உயர்ந்த வுலகம் புகும்."


என்பது நாண்மணிக்கடிகை. (27)

கடவுளை வணங்காவிடின் கல்வியாற் பயனில்லை என்பது இக்குறட் கருத்து.