பக்கம் எண் :

நிலவரை நீள்புக ழாற்றிற் புலவரைப்
போற்றாது புத்தே ளுலகு.

 

நிலவரை நீள்புகழ் ஆற்றின் - ஒருவன் ஈகையால் நிலவுலகத்தின்கண் நிலையான புகழைச் செய்வானாயின், புத்தேள் உலகு புலவரைப் போற்றாது-தேவருலகம் அவனையன்றி அறிவால் மட்டுஞ் சிறந்தவரை விரும்பாது. இக் கொள்கையை.

"புலவர் பாடும் புகழுடையோர் விசும்பின்
வலவ னேவா வான வூர்தி
யெய்துப வென்பதஞ் செய்வினை முடித்தெனக்
கேட்ப லெந்தை சேட்சென்னி நலங்கிள்ளி
வருந்தி வந்தோர் மருங்கு நோக்கி
யருள வல்லை யாகுமதி யருளிலர்
கொடாமை வல்ல ராகுக
கெடாத துப்பினின் பகையெதிர்ந் தோரே".

என்னும் 27-ஆம் புறப்பாட்டுப் பகுதியாலும் அறிக. இதனால் வேள்வி செய்தவர் விண்ணுல கடைவர் என்னும் ஆரியக் கொள்கை மறுக்கப் பட்டமை காண்க.