பக்கம் எண் :

அறத்துப் பால்
துறவறவியல்

இல்லறவின்பத்தைத் துய்த்தறியாதும் துய்த்தும், உலக வாழ்க்கையில் அல்லது பிறவித் துன்பத்தில் வெறுப்பும் வீடுபேற்றில் அல்லது பேரின்பத்துய்ப்பில் வேட்கையுங் கொண்டு, மாணிய (பிரமசாரிய)ப் பருவத்திலேனும் மனையற நிலையிலேனும் முறியன் (தபுதாரன்) நிலைமையிலேனும் மூப்பிலேனும் துறவு பூண்டு அதற்குரிய அறங்களைக் கடைப்பிடித்து, நான் எனது என்னும் இருவகைப்பற்றையும் விட்டுப் பிறவியினின்று விடுதலை பெறுதலைக் கூறும் சிறு பகுதி, துறவறவியல் எனப்பட்டது.

இல்லறத்தாலும் வீடுபேறுண்டாமேனும், அதற்குரிய பொறுப்பு மிகுதியாதலானும், அது ஆசை வளர்தற்கு இடந்தரலானும், அப்பொறுப்பைத் தாங்கவும் ஆசையை அடக்கவும் ஆற்றலில்லார் தனி வாழ்க்கையை விரும்பித் துறவறத்தை மேற்கொள்வர் என அறிக.

துறவறத்திற்குரியனவாகத் திருக்குறளிற் சொல்லப்பட்டுள்ள அறங்கள். அருளுடைமை, புலால் மறுத்தல், கூடா ஒழுக்கம், கள்ளாமை, வாய்மை, வெகுளாமை, இன்னா செய்யாமை, கொல்லாமை, துறவு, அவாவறுத்தல் என்பனவாம்; பயிற்சிகள் தவம், மெய்யுணர்தல் என்பனவாம். இவையெல்லாம் அருள், தவம், துறவு, ஓகம் (யோகம்) என்னும் நான்கனுள் அடங்கும் ஆதலால் இவற்றை நால்வாயில் எனலாம்.

அருளுடைமை, புலால் மறுத்தல், கள்ளாமை, வாய்மை, வெகுளாமை, இன்னா செய்யாமை, கொல்லாமை என்னும் அறங்களும் தவம் என்னும் பயிற்சியும், இல்லறத்திற்கும் ஏற்குமேனும்; அவற்றை முற்றக் கைக் கொள்வதும் நெடுகக் கடைப்பிடிப்பதும் இல்லறத்தில் இயலாமையின், அவை துறவறத்திற்கே முற்றளவாகவுரியனவும் இன்றியமையாதனவுமாகக் கொள்ளப்பட்டன.

ஊர்காவலர் மாறுகோலம் பூண்டு மறைவாகச் சென்று குற்றவாளியரைப் பிடிப்பதும், ஒற்றர் வேறு கோலத்திற் சென்று பகைவர் நிலைமையையும் மருமங்களையும் அறிவதும், அரசன் உருமாறிச் சென்று நகர நோட்டம் செய்வதும், காதலர் தொடக்க நிலையில் மறைவாக ஒழுகுவதும், தற்கொலை செய்யத் துணிந்த ஒருவர் உண்ண வைத்திருந்த நஞ்சை மறைவாக நீக்குவதும், அரசியலிலும் இல்வாழ்க்கையிலும் குற்றமாகாத களவுவினைகளாம்.

போரிற் பகைவரையும் செங்கோலாட்சியிற் கொலைஞரையும் கொல்வது, அரசனுக்குக் கடமை மட்டுமன்றி அறவினையுமாம்.

இங்ஙனமே ஏனையவற்றையும் உணர்ந்து கொள்க.

நீண்ட காலமாகப் பிள்ளைப் பேறில்லாத கணவன் மனைவியர் இறைவனை நோக்கித் தவங்கிடப்பினும், வாழ்நாள் முழுதும் அதைத் தொடர்வது மரபன்மை காண்க. இதை,

மகன்றந்தைக் காற்று முதவி யிவன்றந்தை
என்னோற்றான் கொல்லெனுஞ் சொல்.

என்னும் குறளை நோக்கி யுணர்க.

தமிழர் வாழ்க்கை முறை இல்லறம் துறவறம் என இருவகைப்பட்டதே. இல்லறம் போன்றே துறவறமும் எல்லார்க்கும் பொதுவாம். அதற்குப் பருவ வரம்போ அகவை வரம்போ இல்லை. ஆயின், ஆடவனாயினும் பெண்டாயினும் தனியாகவே அல்லது தன் பாலார் இருக்குமிடத்திலேயே தங்கல் வேண்டும். ஆரியர் மனைவியொடு கூடி மேற்கொள்ளும் காடுறைவு (வானப் பிரத்தம்) என்னும் மூன்றாம் நிலையும், தம்மை முனிவர் என்று கூறிக் கொண்டே இல்லற இன்பத்தை நுகர்ந்து மனைவி மக்களொடு கூடி வாழும் வீடுறைவும், தமிழரும் திரவிடருமான பழங்குடி மக்களை ஏமாற்றித் தாம் என்றும் இன்பமாய் வாழ வகுத்த சூழ்ச்சியாதலால், கூடாவொழுக்கத்தின் பாற்பட்ட போலித் துறவே யென வுணர்க.

இனி, வீடுபேறு இறைவனை வழிபட்டு அவன் திருவருளாலேயே அடையக் கூடியதாயிருப்பதால், கடவுட் கொள்கையில்லா மதத்தினர் துறவறம் ஒழுகுவது பயனில் முயற்சியும் அவர் வீடு பெறுவது கானல்நீர் குடிப்பதும் ஆகும்; (கானல் - பேய்த்தேர்).

"பிறவிப் பெருங்கடல் நீந்துவார் நீந்தார்
இறைவ னடிசேரா தார்".(குறள். 10)

என்று திருவள்ளுவரும்,

"ஈதலறந் தீவினைவிட் டீட்டல் பொருளென்றும்
காத லிருவர் கருத்தொருமித் - தாதரவு
பட்டதே யின்பம் பரனைநினைந் திம்மூன்றும்
விட்டதே பேரின்ப வீடு".

என்று ஒளவையாருங் கூறியிருத்தல் காண்க.

இனி, கடவுட் கொள்கை யுடையாரும் செல்வத் தொடர்பு கொண்டவராயின் துறவியராகார்.

மற்றுந் தொடர்ப்பா டெவன்கொல் பிறப்பறுக்க
லுற்றார்க் குடம்பு மிகை.(குறள். 345)

செல்வத் தொடர்பால் ஊட்டம் மிகும். அது கூடா வொழுக்கத்திற்குத் தூண்டும். அதனால் ஒரு பற்றுந் துறக்க முடியாது. ஆசையும் அறாது மிகும். கூடா வொழுக்க மின்றேனும், செல்வத் தொடர்பினர் மணமிலியர் (Celibates) அல்லது மணத் துறவியரே யன்றி முழுத் துறவியராகார். ஆதலால் அடியார் அல்லது நாயனார் என்றே அழைக்கப்படற்குரியர். இனி மணவெறுப்பாளரும் (Misogamists) பெண்வெறுப்பாளரும் (Misogynists) உளர்.

முற்றத் துறந்தவரே துறவியர் என்றும் முனிவர் என்றும் அடிகள் என்றும் சொல்லப்படத் தக்கவர்.

செல்வத் தொடர்பிருந்தும் சிறிதும் பற்றின்றிச் செல்வத்தைத் திருத்தொண்டிற்கும் பொதுநலத்திற்கும் பயன்படுத்தி, தவத்திருக் குன்றக்குடியடிகள் போல் இடையறாது எழுத்தாலும் சொல்லாலும் மக்கட்கு அறிவுறுத்தி வரும் துறவியர் ஒரு சிலரே.

துவராடை யணிந்து இரந்து பிழைப்பவர் ஆண்டியரேயன்றித் துறவியராகார்.

வீடுபேறு, தீவினை யொன்றுமின்றி நல்வினையே செய்யும் இல்லறத்தாலும், கண்ணப்ப நாயனார் கண்ணப்பியது போன்ற சிறப்புப் பத்தி வினையாலும், துறவறத்தினாலும், கிட்டுவதாம். அவற்றுள் இறுதியது இனி இங்குக் கூறப்பெறும்.

அதிகாரம் 25. அருளுடைமை

அஃதாவது, தொடர்பு கருதாது அறுவகைப்பட்ட எல்லா வுயிர்களிடத்தும் ஒப்பக் கொள்ளும் இரக்கம். இல்லறத்திற்கு அன்புடைமைபோல் துறவறத்திற்கு அருளுடைமை அடிப்படை யறமாம். அதனால் இது முதற்கண் கூறப்பட்டது. இதனால், அன்புபோன்றே அடைக்குந் தாழின்றிச் செயலாக வெளிப்படும் அருளறம் வீடுபேற்றிற்கு இன்றியமையாத தென்பதும், அறிவு மட்டும் போதா தென்பதும், பெறப்படும்.

 

அருட் செல்வஞ் செல்வத்துட் செல்வம் பொருட்செல்வம்
பூரியார் கண்ணு முள.

 

செல்வத்துள் செல்வம் அருள் செல்வம் - செல்வங்களெல்லாவற்றுள்ளும் சிறந்தது அருளாகிய செல்வமே; பொருள் செல்வம் பூரியார் கண்ணும் உள - மற்றப் பொருளாகிய செல்வங்கள் கீழ் மக்களிடத்திலும் உள்ளன.

செல்வம் போன்ற பண்பைச்செல்வ மென்றார். உம்மை இழிவு சிறப்பு.