பக்கம் எண் :

மன்னுயி ரோம்பி யருளாள்வாற் கில்லென்ப
தன்னுயி ரஞ்சும் வினை.

 

மன் உயிர் ஓம்பி அருள் ஆள்வாற்கு - மற்ற உயிர்களையெல்லாம் பேணி அவற்றினிடத்து அருள் பூண்பவனுக்கு; தன் உயிர் அஞ்சும் வினை இல் என்ப - தன்னுயிர் அஞ்சுவதற் கேதுவான தீவினைகள் இரா என்று கூறுவர் அறிந்தோர்.

"தன்னுயிர் போல் மன்னுயிரையும் எண்ண வேண்டும்" . என்னும் பழமொழியில், மன் என்னுஞ் சொல் மற்ற என்று பொருள் படுதலால், அதை யொத்த இவ்விடத்தும் அப்பொருள் உரைக்கப்பட்டது. அஞ்சும் வினை தன்னதாகவும் பிறரதாகவுமிருக்கலாம். தன் வினையாயின் மறுமைத் துன்பமும் பிறர் வினையாயின் இம்மைத் துன்பமும் நோக்கிய அச்சமாகும். உயர்ந்த அருளறம் பூண்டோன் தீவினை செய்யான் என்பதும், அவனால் அருள் செய்யப் பெற்றவனும் நன்மைக்குத் தீமை செய்யான் என்பதும், கருத்து.