பக்கம் எண் :

வலியார்முற் றன்னை நினைக்கதான் றன்னின்
மெலியார்மேற் செல்லு மிடத்து.

 

தான் தன்னின் மெலியார்மேல் செல்லுமிடத்து-ஒருவன் அருளில்லாமையால் தன்னினும் எளியவரை வருத்துமாறு அவர்மேற் செல்லும் பொழுது; வலியார் முன் தன்னை நினைக்க-தன்னினும் வலியவர் தன்னை வருத்தவரும்போது தான் அவர் முன் அஞ்சி நிற்கும் நிலையை நினைக்க.

தலைமை பற்றி 'வலியார்' 'மெலியார்' என உயர்திணை மேல்வைத்துக் கூறியது அஃறிணையையுந் தழுவும். தன்குற்றந் தனக்குத் தோன்றாதாகலின், அது தோன்றுமாறும் அதனால் அருள் பிறக்குமாறும் ஒரு வழி சொல்லப்பட்டது.