பக்கம் எண் :

தினற்பொருட்டாற் கொல்லா துலகெனின் யாரும்
விலைப்பொருட்டா லூன்றருவா ரில்.

 

தினற்பொருட்டு உலகு கொல்லாது எனின்-பேதைமை அல்லது குறும்புத்தனம் பற்றியல்லது ஊன் தின்பதற்காக உலகத்தார் உயிரிளைக் கொல்லாரெனின்; விலைப் பொருட்டு ஊன் தருவார் இல்-பொருள் பெறும் நோக்கத்தோடு ஊன் விற்பவரும் ஒருவரும் இரார்.

ஊன் தின்பதற்காக ஓர் உயிரியைக் கொன்றால், அக் கொலைக்குற்றம் அதைக் கொன்றவனைச் சாருமே யன்றி அதன் ஊனைத் தின்றவரைச் சாராது, என்னும் புத்த சமய வுறழியை (வாதியை) நோக்கிக் கூறிய கூற்றாகும் இது. விலைக்கு வாங்கி யுண்பாரும் வீட்டிற் கொன்று உண்பாரும் ஆக ஊனுண்பார் இரு திறத்தார். குற்றத்தைப் பொறுத்த அளவில் இவ்விரு திறத்தாரும் ஒரு திறத்தாரே. ஒருவன் ஒர் உண்ணப்படும் உயிரியைக் கொல்வதற்கு அதன் ஊனுண்பவரும் நேர்வகையிலும் நேரல்லா வகையிலும் தூண்டுபவராயிருத்தலால், அக் கொலைக் குற்றம் கொன்றானையும் தின்றாரையும் ஒக்கச் சாரும் என்பது வள்ளுவர் கருத்தாகும். உலகம் என்பது இங்குப் பெரும்பான்மை பற்றிய ஆகுபெயர். 'ஆல்' ஈரிடத்தும் அசைநிலை.